வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

கபாலம் நிறையாமல் தீரும் பசி

சு.க.சிந்துதாசன்

கோப்பைகள்..... சட்டிகள்......
வாளிகள்......
எனச் சுமந்தபடி
சனவரிசை நீள்கிறது

சற்று முன்தான்
மணியொலித்தது
அதற்குள்
அவ்வரிசை
தேர்வடமாய்....
ஆயிற்று

பதிவுக்காரனின் வேகம்
இன்னும் இன்னும்
பசியைம் கூட்டும்

உணவளிப்போன்
வார்த்தைகள்....
வெந்த புண்ணில்
வேல் பாச்சும்

கதியிழந்தாச்சு
எதற்கும்
இசைந்துதான்
ஆக வேண்டும்

மணத்தாலே
வாந்திவரும்
சோற்றுக்கும்
புளு நெளியும்
பயிற்றங் காய்க்கும்
இந்நிலையா?

எவரும் எவரையும்
இழிக்காத
அந்தஸ்த்துள்ள
பிச்சையெடுப்பு

வரிசைக் கடைசியில்
சிலருக்கு
உணவு கிடைக்காமலேயே
பசி தீர்கிறது.

நன்றி-ஜீவநதி

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

மீட்பாரற்ற கரையும் நண்டுகளின் நர்த்தனமும்




சு.க.சிந்துதாசன்

அலைதழுவிப் போன கரைகளெங்கும்
நிரையாய் நண்டுகள்
நடக்கத் தொடங்கியதால்...
கீறல்களால் கரை நிரம்பிற்று

கீறல்களையழிக்க
அலைக்கரங்கள் முயலவில்லை
கரைகள் பற்றிய
கவலை எதுவுமின்றி
கடலேனோ கடுமமைதி கொண்டிற்று

அலைகளின் ஸ்பரிசங்களை
ஏற்று பழக்கப்பட்ட கரைக்கு
நண்டுகளின்.... கீறல்கள்...
வலியை
ஏற்படுத்தியிருக்கக் கூடும்
வலிகளிலிருந்து மீள்வதற்கான
தவமொன்றைத் தொடங்கிய கரை
அலைகளைச் சபிக்கவும்
தவறவில்லை.

காற்றும் ஏனோ
விசும்பல்களுடனும் முனகல்களுடனும்
அடங்கிற்று

மீட்பாரற்ற கரை
மீளமீள வலி சுமக்கையில்....
நடந்த நண்டுகள்
நர்தனமாடவும் தொடங்கினால்.........?

நன்றி-திண்ணை,சங்குநாதம்

சனி, 24 ஜூலை, 2010

சொர்ப்பனத்தில் ஒரு போர்



சு.க.சிந்துதாசன்

அருகாக ஒரு வெடி ஓசை
செவிப்பறை அதிர்கின்றது
புழுதி என்னை குளிப்பாட்டிப் போக
மூச்சுத் திணறிய படி
வெள்ள வாய்க்காலில் பாய்கிறேன்
அவ்வாய்க்கால்
ஒரு காப்பரணாய் இருக்க
அதில் நெடுஞ்சாண் கிடையாய்....
படுத்துக் கொண்டு
புலன்களை கூர்மையாக்கினேன்.

சற்றுத் தொலைவில்
இரைச்சலுடன் பல கவசவாகனங்கள்
எறிகணைகளை வீசிக்கொண்டு
நகர்ந்து வருகின்றன.
இனந் தெரியாத் திசைகளில் இருந்து
ஏவப்பட்ட பல்வேறு குண்டுகள்
எனைச் சுற்றி
வீழு்ந்து வெடிக்கின்றன.

அப்பளம் பொரிவது போல்
சுற்று முற்றிலும் துப்பாக்கி ரவைகள்
வெடித்துக் கொண்டிருந்தன.
வானைக் கிழித்து வந்து
ஆங்காங்கே
கிபீர்..... மிக்...பைற்றர்...
என்பன
குண்டுகளை உமிழ்ந்தன.

புரியாத பாஷைகளில் பேசியவாறு
மூர்க்கமாய் படைவீரர்கள்....
எனை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

எனைச் சுற்றி ஒரு
துவம்சம் நடந்து கொண்டிருந்தது.
எதையும் சமாளிக்க முடியாமல்
திணறுகிறேன்.

என் பின்னால்...
”கான்சப்” என்ற குரல் கேட்டது.
கைகளை உயர்த்தியவாறு
திடுக்கிட்டு எழுகிறேன்....
படுக்கை அறை
பூட்டிக் கிடந்தது.

புதன், 21 ஜூலை, 2010

இலையானும் காகமும் நாயும்


சு.க.சிந்துதாசன்

உயிரோடிருந்தபோது
எவ்வாறெல்லாம் அவன்தன்னை
அழகு பார்த்திருப்பான்
இப்போதிவனை
இலையானும் காகமும்
புசித்து மகிழ்கிறது
வெளியேறிவிட்ட குருதி
கிரவல் வீதியின் சிறுகுழியில்
குளமாய்.. நிரம்பி
நாயொன்றின்
தாகம் தீர்க்கிறது

அலங்கோலப்பட்டுக் கிடக்குமிந்த
பிணம்
அடக்கம் செய்வதற்கானதா?
தகனம் செய்வதற்கானதா?
அதுகூடத் தெரியவில்லை.
அதிலொன்றேனும் செய்யப்படவுமில்லை.
அவனுக்கு மட்டுமல்ல
இக்கதியென
மனம் இறுகிக் கொள்கிறது.

அருகாக மிக அருகாக
நரிகளின் ஊளை
காதைக் கிழிக்கிறது.
தாங்க முடியாமல் தலைமறைவாகிறேன்.

நரிகளின் ஊளையைப் பொறுட்படுத்தாதபடி
இலையான் காகம்
நாய் என்பன
விருந்துண்டு மகிழ்கின்றன.

நன்றி-வார்ப்பு

ஒரு சருகு பற்றிய குறிப்பு


சு.க.சிந்துதாசன்

உரத்து வீசும் காற்றில்
அலையும் ஒரு சருகு
மழைக்கு
எங்கோ நிலத்தில்
ஒட்டிக்கொள்ளும்
வெள்ளம் வாரியடிக்க
அதனொடு பெயரும்
நீர் வற்றிய பின்
எங்கோ ஒரு மூலையில்
முடங்கும்

இப்போ
மென்காற்றுக்கு
நினைவு பெறும்
சூரிய வெப்பத்தில்
மீண்டும் தன்
இயல்பு காணும்

முன்பு
இதன் பெயரும்
வாழ்வும்
வேறு

இனி
காற்று....மழை.....
வெள்ளம்..... என
இங்கு எல்லாம் வரும்.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

என்னை வதம்செய்த உனது கடைசிப் பாடல்


சு.க.சிந்துதாசன்


எச்சில் ஊறும் உனது வாயால்
நீ பேசிய போது
நான் அருவெருத்து முகம் சுழித்ததுண்டு
மிக அருகில் நெருங்கி
ரகசியமென
நீ எனது செவியில் ஓதும்
வார்த்தைகளை மட்டுமன்றி
உன் வாயிலிருந்து வீசும்
அந்தத் துர்நாற்றத்தையும்
என் மனம் ஒதுக்கி வைக்கும்

என் நிலை புரியாத நீ
ஏதோ புதுமை செய்ததாய் எண்ணியும்
என்னைப் புது உலகில் சிருஷ்டிப்பதாயும்
என்னையே தொடர்ந்தாய்

உனது கரகரத்த குரலும்
எக்காளமிடும் சிரிப்பும்
என் கிலேசத்தைக் கூட்டிப் போகும்

ஒவ்வொன்றாய்
எனது பற்றிய
உனது ஒப்பனைகள்
சில சமயங்களில்
என்னைச் சிரிப்பூட்டும்
நீ என்னை ஆரத் தழுவி
என் மேனியணைக்கையில்
விலகிக் கொள்ள
நான் துடித்த கணங்கள்
அசுரத்தனமானவை

நிலம் தொடும் நிழலாய்
எனைத் தொடர்ந்த நீ
முழுப்பார்வையையும்
என்னில் வீசியவாறும்
கைகளை இறுகப்பற்றிக் கொண்டும்
எனது பெயரை
உச்சரிக்க எத்தனித்தபடியும்
வதம் செய்து நீ போனாய்
அந்தக் கணங்கள்
இன்னும் என் செவிகளில்
துயர்ப் பாடலாய் ஒலிக்கிறது

புதன், 21 ஏப்ரல், 2010

மல்வத்து ஓயாவில் நீராடல் தொடர்கிறது



-பொலிகையூர் சு. க சிந்துதாசன்

மரணத்திலிருந்து மீண்டவர்களுக்காக
மல்வத்து ஓயாவில்
புனித நீராடலுக்கு ஏற்பாடு

நீண்டோடும் அவ்வாற்றை
முட்கம்பி வேலிகளால் கூறுபோட்டு
குளிப்பொழுங்கு நடக்கிறது

இந்த ஆறு என்றும்
சனத்திரளை
இம்மாதிரிக் கண்டிராது

கோடையாற்றில்
நீர் வற்றென்றாலும்
வேறு வழியின்றிப் பற்பலருமதை
நாடத்தான் செய்தனர்

புனித நீராடல்
தொடர்ந்தபடியிருக்க
ஆற்றின் நடையோடு
சேறு… சகதி…
மலம்… எனக் கலந்து
நீரின் நிலை மாறிற்று

இரத்தக் கறைபடிந்த
எனது ஆடைகள்
இன்னும் கழற்றப்படவுமில்லை
துவைக்கப்படவுமில்லை.

ஆற்றை வெறித்தபடி பார்த்த
நானும்
என்போன்றோரும்
திரும்பி நடக்கிறோம்

மல்வத்து ஓயாவில்
நீராடல் தொடர்கிறது.

நன்றி - வார்ப்பு

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

கைம்மாறு


-பொலிகையூர் சு. க சிந்துதாசன்

என் மனவெளியில்
விதைக்கப்பட்ட வலிகளில் இருந்துதான்
வாழ்விருப்பின் அடையாளம்
அர்த்தப்படுத்தப்பட்டது.
அவ்வலியின் உச்சமே என்னுள்
மலைசுமக்கும் மறத்தையும் தந்தது.

என் தல யாத்திரைகள் ஒவ்வொன்றும்
தங்குமடங்களிலேயே
நிறைவுற்றுப் போயினவெனினும்…
மாற்றீடாய்
தங்குமடங்களைத் தரிசனத்துக்கான
தலங்களாய்
ஆக்கும் திறனைத் தந்ததும்
அவ்வலிகளே.

வலிகள் ஏனோ வற்றாத ஊற்றாய்…
பீறிட்டுக் கொண்டிருந்தன.
இருந்தும்
என் மனவாழம்
அறியாமலவை
தோற்றே போயின.

குருசேஸ்த்திரத்தில் என் வாழ்வு
பாண்டவர்கள் பக்கத்தில் இருந்தாலும்
துரியோதனன் எனக்கு
உயிர்ப்பிச்சை தந்துள்ளான்.

அர்ச்சுணன் கையில்
நாகஸ்திரம் இருந்திருந்தால்… அது
பலமுறை ஏவப்பட்டிருப்பதுடன்
பல தலைகளையும் கொய்திருக்கும்.

காக்கப்பட்டவன் எவனெனினும்
‘காத்தவன்’ கடவுளல்லவா
கணமேனும் அவனை
மறக்கிலேன்!

நன்றி- வார்ப்பு, Saturdayமெயில்